வியாழன், 24 ஆகஸ்ட், 2017

பசாபுசா கொடுத்த நம்பிக்கை – விழியன்

*பசாபுசா கொடுத்த நம்பிக்கை  – விழியன்*

_(மழலைக் கதை வரிசை)_

அந்த கடற்பறவை பதட்டத்துடன் பறந்து வந்தது “பென்குயின் நண்பர்களே எல்லோரும் இங்கே வாருங்கள்” எனக் கூக்குரல் இட்டது. பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்த பென்குயின்கள், மீன்வேட்டைக்கு தயாராகிக்கொண்டிருந்த பென்குயின்கள், மருத்துவமனைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பென்குயின்கள் என எல்லா பென்குயின்களும் கூடின. எல்லா வகையான பென்குயின்களும் கூடின. “என்னாச்சு அமோங்கு? ஏன் இத்தனை பதட்டம்” என்று கேட்டது ஒரு வயதான பென்குயின்.

“நாம மோசம் போகப்போறோம். இதுவரை மனிதர்களே வராத நம்ம பகுதிக்கு இப்ப மனிதர்கள் வரப்போறாங்க. ஒரு கப்பல் நம்ம பகுதியை நோக்கி வருதாம். நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்திருக்கு. அவர்கள் வந்தால் நம் நிலைமை மோசமாகிவிடும்” என்றது அமோங்கு. அது தான் அந்த கடற்பறவையின் பெயர்.

மொத்த பென்குயின் உலகமும் உறைந்து போனது. கடும் குளிர் வேறு. ஆமாம் அண்டார்ட்டிகா பற்றி தெரியும் தானே? முழுக்க பனி பிரதேசம். மனிதர்கள் ரொமப் ரொம்ப குறைவு. அங்கே வாழ்வது சிரமம். ஆனால் வருடம் முழுக்க ஆராய்ச்சி செய்ய அங்கே வருவார்கள். அட அங்கே பென்குயின்கள் பயந்துபோயிருக்கு நமக்கென்ன பேச்சு இங்கே.

இப்ப என்ன செய்வது என குழப்பம். சில வயதான பென்குயின்கள் “வாங்க அந்த பகுதிக்கு போய்விடுவோம், அங்கே சில குகைகள் இருக்கு அங்கே மறைந்துகொள்ளலாம்” என்றன. சில பென்குயின்கள் “எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடுவோம் வாங்க” என்றன. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தினை தெரிவித்தன. ஆனால் யாருக்கும் அங்கே இருந்து போக மனம்வரவில்லை. அங்கே சென்றாலும் அவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது?

யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ஒரு சின்ன பனிமலை மீது ஏறியது பசாபுசா. அது ஒரு தேவதை வகை பென்குயின். குட்டி பென்குயின். இரண்டாம் வகுப்பிற்கு செல்கின்றது “பெரியவர்களே, நண்பர்களே. நாம் ஏன் இங்கிருந்து போகவேண்டும். நாம் மனிதர்களை பயமுறுத்துவோம். அவர்களை இங்கே வரவிடாமல் தடுப்போம்” என்றது. ஒரு நிமிடம் அங்கே மெளனம் நிலவியது.
“எப்படி?” என்றது ஒரு வயதான ராஜ பென்குயின்.

பசாபுசாவின் கண்கள் மின்னியது. அது திரும்பி “அதோ அங்கே இரண்டு மிகப்பெரிய பனிமலைகள் இருக்கின்றன பாருங்கள். கப்பல் வரும்போது நாம் இதனை வேகமாக தள்ளுவோம். வேகமாக வரும் பனிமலையைப் பார்த்து அவர்கள் நிச்சயம் பயந்துவிடுவார்கள். வந்த திசையில் போய்விடுவார்கள்” என்றது.

மீண்டும் மெளனம். யாரும் எதுவும் செய்யவில்லை. “செய்வோம்” என்றது இன்னொரு குட்டி பென்குயின். அந்த குரல் ஓங்கி ஓங்கி ஒலித்தது. செய்வோம் செய்வோம் என அந்த பகுதியே அதிர்ந்தது.

அமோங்கு பேசியது “இது மிகவும் சவாலான காரியம். ஆனால் நாம் எல்லோரும் நினைத்தால் இது நிச்சயம் சாத்தியம். நான் சில பலமான கடல்மிருகங்களை அழைத்து வருகின்றேன். அவர்கள் நமக்கு உதவுவார்கள்” என்று சொல்லியபடி பறந்தது.

கிடுகிடுவென எல்லோரும் ஒன்றிணைந்தார்கள். இரண்டு குழுக்களாக பிரிந்தார்கள். இரண்டு பெரிய பனிமலைக்கு பின்னர் குழுமினார்கள். அமோங்கு அழைத்து வந்த மற்ற வலுவான கடல் பிராணிகளும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். பசாபுசா தான் திறமையாக திட்டமிட்டது. என்ன செய்ய வேண்டும் யார் எங்கு நிற்க வேண்டும் என திட்டமிட்டது. அமோங்கு தான் இந்த பனிமலைக்கும் அந்த பனிமலைக்கும் பறந்து பறந்து வேலைகளை பார்வையிட்டது.

கப்பலின் வருகைக்காக காத்திருந்தார்கள். அன்று இரவு யாரும் தூங்கவில்லை. விடிந்தவுடன் அமோங்கு உயர பறந்து கப்பல் எங்கே வருகின்றது என நோட்டம் விட்டது. ‘கூகூ…’ என சத்தமிட்டு கப்பலின் வருகையை அறிவித்தது.

“நாம் செய்வோம்..
நாம் தான் செய்வோம்
நம்மால் முடியும்
நிச்சயம் முடியும்”

என்று ஒரு பாட்டினை பசாபுசா சத்தமாக பாடி எல்லோரையும் உற்சாகமூட்டியது. கப்பல் வரவும் இரண்டு பக்கமும் பனிமலை அந்த கப்பலை நோக்கி வேகமாக நகரவும் கப்பலில் இருந்தவர்கள் பயந்துவிட்டார்கள். கப்பல் நின்றது. சில நிமிடங்களில் அப்படியே திரும்பியது. அது தூர தூர ஒரு புள்ளியாக மறைந்தது.

ஹே…ஹே வென மகிழ்ச்சி குரல் அந்த பகுதியையே இன்னும் உறைய வைத்தது.

- விழியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download